“நடிகை ஸ்ரீதேவி” 50 ஆண்டு கால சினிமா சகாப்தம் !! அன்று முதல் இன்று வரை !!

சினிமா

தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி இந்திய திரைப்படத் துறையில் புகழ் பெற்று விளங்கினார். 1969 ஆம் ஆண்டு இயக்குநர் எம் ஏ திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த ‘துணைவன்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.அதன் பிறகு குழந்தை நட்சத்திரமாக ‘நம்நாடு’ கனிமுத்து பாப்பா’ ‘வசந்த மாளிகை’ போன்ற பல படங்களில் நடித்தார். இவர் கதாநாயகியாக அறிமுகமானது 1976 ஆம் ஆண்டு இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’ திரைப்படமாகும்.

1977 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கையில் பெரிய மைல் கல்லாக அமைந்தது.1975 ஆம் ஆண்டு இயக்குநர் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜுலி’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் வெளிவந்த சோல்வா சாவன்’ (16 வயதினிலே) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி கண்ட ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் ஹிந்தியில் ‘சத்மா’ என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்த ஸ்ரீதேவி 1996 ஆம் ஆண்டு நடிகர் அனில்கபூரின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான  போனிகபூரை மணமுடித்தார். அதன் பின் சினிமாவை விட்டு விலகி இருந்த ஸ்ரீதேவி 14 ஆண்டுகளுக்குப் பின் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்கலானார்.

இதுவரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏறக்குறைய 275 படங்களில் நடித்திருக்கிறார். ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சிறந்த நடிப்புக்காக 4 முறை பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.பின்னர் 2013ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மேலும் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் தயாராகிறது.பெங்களூரைச் சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தைத் தயாரிக்கின்றனர்.ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனி கபூரிடமும் இதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த படம் ஐந்து பாகங்களாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் படம் தயாராகின்றது.ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உட்பட அனைத்து மொழி நடிகர்- நடிகைகளும் ஸ்ரீதேவி பற்றி பாராட்டிப் பேசும் கருத்துக்களும் படத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீதேவியின் படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் ஆகியோரது பேட்டியும் படத்தில் இடம்பெறுகிறது.ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை, சாதனைகள், விருதுகள், குடும்பம் உள்ளிட்ட விசயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மனதையும் தனது அழகான நடிப்பாலும் வசீகரத்தாலும் கவர்ந்த ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மாரடைப்பால் உயிர் பிரிந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

இதனிடையே பிரபலங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது இரங்கல்களை வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.  அவர் ஒரு சிறந்த நடிகை என்று தனது இரங்கல் செய்தியில் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை மிக குறுகியது. கணிக்க முடியாதது என அவரது மரணம் உணர்த்தியுள்ளது.  அவரது மறைவால் அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா அமைதி அடையட்டும் என நடிகை திரிஷா ட்வீட் செய்துள்ளார்.

ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்ற செய்தியால் மனமுடைந்து விட்டது. இந்த செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  அவரது ஆன்மா அமைதியில் ஆழட்டும் என நடிகை பிரீத்தி ஜிந்தா ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எனக்கு வார்த்தைகள் இல்லை. ஸ்ரீதேவி மீது அன்பு செலுத்தியவர்கள் அனைவருக்கும் எனது இரங்கல்கள். இது ஒரு கருப்பு தினம் என நடிகை பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி மேடம் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். எனது அழுகையை நிறுத்த முடியவில்லை என நடிகை சுஷ்மிதா சென் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.இதேபோன்று நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நேஹா தூபியா, நிம்ரத் கவுர் உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.